மிகக்குறைந்த செலவில் டெல்லி ஐஐடி கண்டறிந்த கரோனா சோதனை கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்தியாவில் கரோனா பரவலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இதனை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் சோதனைகளை அதிக அளவில் மேற்கொள்ளவும் பல்வேறு புதிய வியூகங்களை அரசு வகுத்து வருகிறது. அதன்படி, வழக்கமாக மேற்கொள்ளப்படும் ஆர்டி- பிசிஆர் சோதனைகளுக்கு முடிவுகள் வெளிவர நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதாலும், பரிசோதனைக்கான செலவுகள் அதிகம் ஆவதாலும், அதற்கு மாற்றாக ஆன்டிபாடி சோதனைகளை மேற்கொள்ள இந்தியா முடிவு செய்தது.
இதற்காக சீனா உட்பட பல வெளிநாடுகளிலிருந்து ரேபிட் சோதனை கிட்களை இந்தியா இறக்குமதி செய்தது. இதில் சீனாவிலிருந்து வந்த கருவிகள் பெரும்பாலும் தவறான சோதனை முடிவுகளை காட்டுவதால், அவற்றை பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், மிகக்குறைந்த செலவில் டெல்லி ஐஐடி கண்டறிந்த கரோனா சோதனை கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
டெல்லி ஐஐடி-யால் வெறும் மூன்றே மாதங்களில் கண்டறியப்பட்டுள்ள இந்த புதிய பிசிஆர் கருவியின் விலை சர்வதேச சந்தை விலையைவிட மிகக்குறைவாகும். இதன்மூலம், துல்லியமான முடிவுகளைக் குறைந்த செலவிலேயே பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி ஐஐடி-யின் இந்த கண்டுபிடிப்பிற்கு ஐ.சி.எம்.ஆர். அமைப்பும் தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனையடுத்து விரைவில் இந்த கருவி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.