தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் இன்று (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அதே சமயம் அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தேசிய பேரிடர் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த இரு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது
இந்த நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த நிலச்சரிவு தொடர்பாகச் சுகாதாரத் துறை மற்றும் தேசிய சுகாதார இயக்கம் ஒரு கட்டுப்பாட்டு அறையைத் திறந்துள்ளது. அதில் அவசர உதவிக்காக 9656938689 மற்றும் 8086010833 என்ற உதவி எண்களை அறிவித்துள்ளது. அதோடு மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க இரண்டு விமானப்படை ஹெலிகாப்டர்கள் கோவை மாவட்ட சூலூரில் இருந்து சென்றுள்ளன.
இந்நிலையில் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 50க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி எம்.பி. எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வயநாட்டில் மேப்பாடி அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் நான் மிகவும் வேதனையடைந்துள்ளேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் சிக்கியவர்கள் விரைவில் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்.
கேரள முதல்வர் மற்றும் வயநாடு மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் பேசினேன். அப்போது அவர்கள் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக உறுதியளித்தனர். அனைத்து மீட்புப்படை முகமைகளுடன் ஒருங்கிணைப்பை உறுதி செய்யவும், கட்டுப்பாட்டு அறையை அமைக்கவும் கூறினேன். அதோடு நிவாரணப் பணிகளுக்குத் தேவையான உதவிகளைத் தெரிவிக்கவும் நான் அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். மத்திய அமைச்சர்களிடம் பேசி, வயநாட்டுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் நிர்வாகத்திற்கு உதவுமாறு அனைத்து ஐக்கிய ஜனநாயக முன்னணி ஊழியர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.