இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் அரசு அலுவலகங்களில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற இருக்கும் நிலையில், டெல்லியில் செங்கோட்டை பகுதிக்கு தேசியக்கொடி ஏற்றுவதற்காக இந்திய பிரதமர் மோடி வந்த நிலையில், மூவர்ண தேசியக் கொடியை ஏற்றும் முக்கிய நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி செங்கோட்டையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பையும் ஏற்றார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் தூதர்கள், அதேபோல் இந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்ற இந்திய வீரர்கள் அனைவருமே சமூக இடைவெளியுடன் குழுமியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி வைத்த பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அவரது உரையாவது, ''நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த அனைவரையும் நினைவுகூர்கிறேன். கரோனா காலத்தில் மக்களை காக்க போராடிய மருத்துவர்கள், தடுப்பூசி தயாரித்தவர்களுக்கு நன்றி. ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு நாட்டின் பெருமையை உலகறியச் செய்தவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர் (கைதட்டி உற்சாகப்படுத்தினர்). ஒலிம்பிக் களத்தில் புதிய வரலாறு படைத்தது மிகப் பெரிய விஷயம். வீ ரர்கள் நமது இதயத்தை வென்றதுடன் வருங்கால தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக இருக்கின்றனர். ஆகஸ்ட் 14 நாடு பிரிவினை அடைந்தபோது பொதுமக்கள் கடும் துயரம் அனுபவித்தனர். சுதந்திரம் பெற்றபோது நாடு பிரிவினை அடைந்த அந்த வேதனையை இன்னமும் உணர்கிறேன். கரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலகத்திலேயே நம் நாடுதான் முதலிடத்தில் உள்ளது.
உலகின் முன்னணி நாடுகளில் கரோனா தடுப்பூசி எப்போது கிடைக்க தொடங்கியதோ அப்போதே இந்தியாவிலும் கரோனா தடுப்பூசி கிடைத்தது. நகரம் கிராமம் என்றில்லாமல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வளர்ச்சி அடைய உள்கட்டமைப்புகள் பலப்படுத்தப்படும். நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக நிறைய திட்டங்களை வகுத்திருக்கிறோம். மின் இணைப்பு, ஓய்வூதியம், கேஸ் இணைப்பு உள்ளிட்டவற்றை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்திருக்கிறோம். கடந்த இரண்டு வருடத்தில் நான்கு கோடி மக்களுக்குச் சுத்தமான குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அனைத்து கிராமங்களுக்கும் சாலை, அனைவருக்கும் வங்கி கணக்கு என்பதுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். அரசின் திட்டங்கள் ஒரு சிலரை சென்று சேராமல் போகும் அவல நிலை இப்போது இல்லை. நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத்தை அளிப்பது அரசின் முக்கிய பணியாகும். ஏழைகளுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் நல்ல சத்தான அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
'மக்கள் மருந்தகம்' திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைக்கின்றன. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நல்ல மருத்துவ வசதி பெற வேண்டும் என்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பட்டியலினத்தவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்கள் சேர்க்கை இடஒதுக்கீடு திட்டத்தை சமீபத்தில் தான் நாங்கள் செயல்படுத்தி இருக்கிறோம். வடகிழக்கு மாநிலங்கள் ஜம்மு காஷ்மீர், லடாக், மலை சாதியினர் வாழும் பகுதிகளை தகவல்தொடர்பு கொண்டு இணைக்க வேண்டும். வடகிழக்குப் பகுதியில் சுற்றுலா, சாகச சுற்றுலா, பனை மரத் தோப்புகள் ஆகியவற்றை வளர்க்க தனி கவனம் செலுத்தப்படும். ஆழ் கடல் பரிசோதனை மூலம் புதிய வளங்களை கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. பின்தங்கிய 110 மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளுக்கு தனி கவனம் செலுத்தப்படுகிறது'' என்றார்.