இந்திய கால் டாக்ஸி நிறுவனமான ஓலா-வில், கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மற்றும் கியா மோட்டார்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து 30 கோடி அமெரிக்க டாலரை முதலீடு செய்துள்ளன. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2,070 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
கொரியாவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா மற்றும் அதன் கிளை நிறுவனமான கியா மோட்டார்ஸ் ஆகிய இரு நிறுவனமும் ஓலா நிறுவனத்தில் முதலீடு செய்து ஒப்பந்தம் செய்துள்ளன.
அதன்படி இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்து போக்குவரத்துக்கு தீர்வு காண்பது, இந்தியாவுக்கு ஏற்ற பேட்டரி வாகனங்களை செயல்படுத்துவது மற்றும் அதற்குரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்டவை ஒப்பந்தத்தில் அடங்கும். போக்குவரத்துக்கு ஏற்ற வாகனங்களை தயாரிப்பது அவற்றை நிர்வகிப்பது உள்ளிட்டவற்றை இவ்விரு நிறுவனங்களும் மேற்கொள்ளும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஓலா ஓட்டுநர்களுக்கு நிதி சேவை, குத்தகை மற்றும் சுலப தவணைகள் செலுத்தி வாகனத்தை பெறுவது எளிதாகும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.