
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே உள்ள செகந்திராபாத்தில் எலெக்ட்ரிக் பைக் ஷோரூமில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எலெக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டதில் ஷோரூம் மேலே உள்ள தங்கும் விடுதிக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் ஷோரூம் மேலே உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்த சென்னையைச் சேர்ந்த சீதாராமன் (வயது 48) உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அத்துடன், தங்கும் விடுதியில் சிக்கி இருந்தவர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே, தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.