உத்தரப் பிரதேசம் மாநிலம், பவுடன் பகுதியைச் சேர்ந்தவர் பன்னா லால். இவரது மனைவி அனிதா. இந்தத் தம்பதியருக்கு ஐந்து பெண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில், தனக்கு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கும் நிலையில் ஆண் குழந்தை வேண்டுமென்று பன்னா லால் நினைத்துள்ளார். இதற்கிடையில், அனிதா கர்ப்பமானார். அதனால், ஆண் குழந்தை வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த பன்னா லால், அனிதாவிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். மேலும் அவர், ‘ஆண் குழந்தைப் பெற்று தரவில்லையென்றால் உன்னை விவாகரத்து செய்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வேன்’ என்று அடிக்கடி மிரட்டி வந்துள்ளார்.
இதனையடுத்து, கடந்த 2020ஆம் ஆண்டு, சம்பவம் நடந்த அன்று, எட்டு மாத கரிப்பிணியாக இருந்த அனிதாவின் வயிற்றை அறுத்து, ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை பரிசோதிப்பதாக மிரட்டியுள்ளார். இதற்கு அனிதா மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி சண்டையாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பன்னா லால், அனிதாவின் வயிற்றை அறுப்பதற்காக அரிவாளைக் கொண்டு வந்து அனிதாவை தாக்கியுள்ளார்.
இதில் பயந்து போன அனிதா அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். ஆனால், விடாமல் துரத்தி ஓடி வந்த பன்னா லால், அனிதாவின் வயிற்றை வெட்டினார். இதில், படுகாயமடைந்த அனிதா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து மயக்கமடைந்தார். இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை மேற்கொண்ட போது, கருவில் ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், இந்தத் தாக்குதலில் அனிதா உயிர் பிழைத்தார்.
இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில், பன்னா லாலை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கு, இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பன்னா லாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.