
இந்தியாவில் தமிழ்நாடு, டெல்லி, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. குறிப்பாக, பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் மத்திய உள்துறை அமைச்சகமும் அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.
அதேபோல் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அமைச்சகங்களின் அரசு உயர் அதிகாரிகள், மாநில ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள், மாநில, யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, இன்று (23/04/2021) பிரதமர் நரேந்திர மோடி, கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் தமிழகம் சார்பில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
மாநிலங்கள் மேற்கொண்டு வரும் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் குறித்து முதல்வர்களிடம் கேட்டறியும் பிரதமர், முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.