டிசம்பர் 15 ஆம் தேதி குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, டெல்லி மதுரா சாலையில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் டெல்லி போக்குவரத்து கழகத்தின் 4 பஸ்களை ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது. 2 போலீஸ் வாகனங்களும் எரிக்கப்பட்டன. இந்த மோதலால் 6 காவலர்கள் மற்றும் 35 க்கும் மேற்பட்ட மாணவர்களும் காயமடைந்தனர். இருப்பினும் மாணவர்கள் அங்கு விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
மாணவர்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில் இந்த வன்முறை தொடர்பாக ரவுடிகள் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பல்கலைக்கழக வளாகம் வெளியே நடந்த வன்முறை தொடர்பாக மாணவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. வன்முறை தொடர்பாக ஏற்கனவே 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக விரோத சக்திகள் கண்காணிக்கப்படுவர்” என்று தெரிவித்துள்ளனர்.