இமாச்சலப்பிரதேசத்தில் உலகின் மிக நீளமான அடல் சுரங்கப்பாதையை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
மணாலியின் தெற்கு போர்ட்டலில் நடந்த நிகழ்ச்சியில் சுரங்கப்பாதையை அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அடல் சுரங்கப்பாதை திறப்பின் மூலம் மணாலி - லே இடையேயான பயண தூரம் 46 கி.மீ. குறையும். ரோட்டங் பகுதியில் 9.02 கி.மீ. நீளத்திற்கு உள்ள சுரங்கப்பாதையால் பயண நேரமும் 5 மணி நேரம் வரை குறையும். ஆஸ்திரிய நாட்டின் தொழில்நுட்ப அடிப்படையில் ரூபாய் 4,000 கோடி மதிப்பில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 10,000 அடி உயரத்தில் 10 மீ, அகலத்தில் இருவழிப்பாதையாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. குதிரை லாட வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் 3,000 கார்கள், 1,500 லாரிகள் செல்ல முடியும். சுமார் 10 ஆண்டுகளாக இந்த சுரங்கப்பாதையின் கட்டுமான பணிகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.