கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்து வெள்ளம் மற்றும் மண் சரிந்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரையில் 400க்கும் மேற்பட்டவர்கள் பலி ஆகியுள்ளனர். 19,000கோடி வரையிலான நஷ்டம், சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சுமார் 7 லட்சம்பேர் வீட்டை விட்டு வெளியேறி மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்படும் அளவிற்கு இயற்கை பழிவாங்கியுள்ளது. தற்போது சில இடங்களில் வெள்ளம் நீர் வடிய தொடங்கிய நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கபட்டது.
மீட்பு பணியில் ஈடுப்பட்ட மீட்பு பணி வீரர் ஒருவர் ஒரு தனியார் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார் அப்போது அவர், மீனவர் ஒருவர் முதுகை படிக்கட்டாக்கியது போன்று மீட்பு பணியின் பொழுது நடந்த பல நெகிழ்ச்சியான நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டார். அந்த நெகிழ்ச்சியான நிகழ்வுகளை போல சில மோசமான நிகழ்வும் நடந்தது என அவர் குறிப்பிடுகையில்,
நாங்கள் மீட்பு பணிக்காக ராணுவ ஹெலிகாப்டரில் சென்றபோது ஒரு பகுதியில் மொட்டை மாடியில் சிகப்பு நிற சட்டை அணிந்த ஒருவர் தங்களை நோக்கி கையசைத்தார். அவர் எதோ இடர்பாட்டில் சிக்கியுள்ளார் என நினைத்து ஹெலிகாப்டரை அந்த குறுகலான இடத்தில் சிரமப்பட்டு அவசரமாக அந்த நபரை நோக்கி கீழே இறக்கினோம் அப்போது அந்த நபர் ஹெலிகாப்டர் முன் செல்பி எடுத்து விட்டு போய்வரும்படி கையசைத்தார். இது ரொம்பவும் மோசமான செயல் எத்தனையோ பேர் உதவி இன்றி தவித்து வரும் சூழலில் இதுபோன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது என அவர் கூறினார்.