குடியுரிமை சட்டம் 1955இன் கீழ் உள்ள 6ஏ சட்டப்பிரிவை அசாம் மாநிலத்தில் மட்டும் அமல்படுத்தப் போவதாக முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஜனவரி 1966ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டுகளுக்கு இடையே, வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமை செல்லுபடியாகுமா? என்பதை சொல்லும் குடியுரிமை 6ஏ பிரிவை எதிர்த்து தான் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள், குடியுரிமை சட்டத்தின் 6ஏ பிரிவு செல்லும் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளனர். 5 அரசியல் சாசன நீதிபதிகள் கொண்ட அமர்வில், 4 நீதிபதிகள் ஒரே தீர்ப்பை வழங்கியுள்ளனர். 1 நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார். இதன் மூலம், 1966ஆம் ஆண்டு முதல் 1977 ஆண்டுகளுக்கு இடையே வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமை செல்லும் என்பது உறுதியாகியுள்ளது.
பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது.
அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்ஸாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழி வகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன. இருந்த போதிலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் அமலுக்கு கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.