கரோனா பரவ வாய்ப்பிருப்பதால் ஜூன் மாதம் 30 தேதி வரை சூயிங்கம்மை விற்பனை செய்ய ஹரியானா அரசு தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 50க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 30ம் தேதி வரை மாநிலம் முழுவதும் சூயிங்கம்மை வாங்கவோ, விற்கவோ கூடாது என்று ஹரியானா முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சூயிங்கத்தை மென்று துப்பும்போது அதில் கரோனா வைரஸ் உயிர்ப்புடன் இருக்க வாய்ப்பிருப்பதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும், பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கும் அடுத்த மூன்று மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.