ஹனிபிரீத் சிங்கை ஆறுநாள் காவலில் எடுத்து விசாரிக்க பன்ச்குலா நீதிமன்றம் உத்தரவு!
தனது பக்தைகளை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக, கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி ஹரியானாவின் பன்ச்குலா நீதிமன்றம் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. அப்போது பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ள பல பகுதிகளில் உருவான கலவரத்தைத் தூண்டிய குற்றத்திற்காக குர்மீத் சிங்கின் வளர்ப்பு மகளான ஹனிபிரீத் சிங்கை ஹரியானா காவல்துறை தேடிவந்தது.
முப்பது நாட்களுக்கும் மேலாக காவல்துறையிடம் சிக்காமல் இருந்த ஹனிபிரீத் சிங், தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். மேலும், மொஹலியில் உள்ள காவல்நிலையத்தில் நேற்று அவரே நேரடியாக சென்று சரணடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது சிபிஐ தரப்பில் இருந்து 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த பன்ச்குலா நீதிமன்றம் உத்தரவிட்டது.