காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் தமிழக வீரர் உள்பட 2 பேர் பலி!
தெற்கு காஷ்மீரில், சோபியான் பகுதியில் அமைந்துள்ள ஆவ்னீரா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து, தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டி வருவதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று முன்தினம் உளவு தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து இரவில் ராணுவத்தின் ராஷ்ட்ரீய ரைபிள் படை பிரிவினர், காஷ்மீர் போலீசின் சிறப்பு நடவடிக்கை குழுவினர், மத்திய ஆயுதப்படை போலீஸ் படையினர் கூட்டாக அந்த கிராமத்துக்கு விரைந்து பயங்கரவாதிகளை தேடும் பணியை தொடங்கினர்கள்.
ஆனால் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டைக்கு எதிராக உள்ளூர்வாசிகள் அணி திரண்டனர். அவர்கள், பாதுகாப்பு படையினர் தங்கள் கடமையை தொடர முடியாதபடிக்கு இடையூறு செய்தனர். ஆனால் அதை முறியடித்து, பாதுகாப்பு படையினர் முன்னேறினர். உடனே அவர்களை நோக்கி பயங்கரவாதிகள் தானியங்கி துப்பாக்கிகளை கொண்டு சரமாரியாக சுடத்தொடங்கினர்.
இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி தரத்தொடங்கினர். நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. நள்ளிரவைத் தாண்டிய நிலையில் துப்பாக்கி சண்டை தற்காலிகமாக ஓய்ந்தது. ஆனால் நேற்று பொழுது விடிந்ததும், மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை தொடர்ந்தது. இந்த சண்டையின் முடிவில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் தொடுத்த 3 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன.
இந்த துப்பாக்கி சண்டையின்போது பாதுகாப்பு படையினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு, ராணுவ ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். இளையராஜா (வயது 26), கவாய் சுமேத் வாமன் 2 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். இருவரில் இளையராஜா, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியில் உள்ள கண்டனி கிராமத்தை சேர்ந்தவர். இவர் பெரியசாமி–மீனாட்சி தம்பதியரின் மகன் ஆவார். 4 ஆண்டுகளுக்கு முன்னர் ராணுவத்தில் சேர்ந்த இவருக்கு 11 மாதங்களுக்கு முன் செல்வி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்ததாகவும், தற்போது செல்வி 5 மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இளையராஜாவின் உடல் விமானம் மூலம் நாளை கொண்டுவரப்படுகிறது. பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்திய பின்னர் ராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
உயிரிழந்த மற்றொரு வீரர், கவாய் சுமேத் வாமன் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.