வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள குலாப் புயல் நாளை (26.09.2021) மாலை கரையைக் கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் சில தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு உருவான நிலையில், அது நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதற்கிடையே, இன்று காலை அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ளது. இதன்காரணமாக வங்கக் கடலின் வடகிழக்கு பகுதி மற்றும் அந்தமான் கடலையொட்டிய பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 65 கிமீ வேகம் வரை வீசிவருகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மாறும் புயல், அடுத்த 48 மணி நேரத்தில் ஒடிசா மற்றும் ஆந்திராவுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கலிங்கப்பட்டினத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் புயல் கரையைக் கடக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 75 கிமீ வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயலுக்கு குலாப் என்று பாகிஸ்தான் பெயரிட்டுள்ளது. குலாப் என்றால் இந்தியில் ரோஜா என்று பொருள். புயல் ரோஜாவை போல மென்மையாக சேதாரமில்லாமல் போகுமா அல்லது ஆக்ரோஷமாக இருக்குமா என்பது இன்னும் 12 மணி நேரத்தில் தெரியவரும்.