பெண்களுக்கு எதிரான அதிகார மீறல்கள், பாலியல் துன்புறுத்தல், தாக்குதல்கள் இந்திய அளவில் வட மாநிலங்களில் அதிகளவில் நடைபெறுகின்றன. குறிப்பாக பெண்களை அவமானப்படுத்தி அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டு பாதிக்கப்படுவர்களை அவமானப்படுத்தும் சம்பவங்களும் அவ்வப்போது வட இந்தியாவில் நடந்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக இப்போது பெண் ஊழியர்களை நிர்வாணமாக சோதனை செய்ததாக செய்தி வெளியாகியுள்ளது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நடந்தது, இந்தியப் பிரதமர் மோடி மூன்று முறை முதல்வராக இருந்த மாநிலமான குஜராத்தில் தான்.
இங்குள்ள சூரத் மாநகராட்சியில் பயிற்சி பெண் ஊழியர்கள் பத்து பேர் பயிற்சி காலத்தை முடித்து மாநகராட்சியில் நிரந்த ஊழியர்களாக பணி நியமனம் பெறுவதற்கு மருத்துவ பரிசோதனையில் கலந்துகொண்டனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உடல் ரீதியாக தகுதி பெற்றவர்களா என்பதை கண்டறியும் இந்த சோதனைக்காக 20 ந் தேதி காலை சூரத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பணிக்கு தேர்வான 10 பெண்களும் சென்றுள்ளனர். பிறகு அவர்கள் மகளிர் வார்டுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு வந்த பெண்களை ஆடைகளை கலைத்துவிட்டு சோதனைக்கு வருமாறு பெண் மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.
ஒவ்வொருவராக உடல் பரிசோதனை செய்வார்கள் என்று ஒரு பெண் ஊழியர் மட்டும் உள்ளே சென்றிருக்கிறார். ஆனால், ஒவ்வொருவராக பார்க்க முடியாது என கூறி ஒரே நேரத்தில் அனைத்து பெண்களையும் ஒன்றாக சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள் என கூறப்படுகிறது. வேறு வழியில்லை, உடல் தகுதியில் தேர்ச்சிபெற்றால் மட்டுமே வேலை கிடைக்கும் என்பதால், 10 பெண் ஊழியர்களும் சோதனைக்கு தயாராகியுள்ளனர். பிறகு, "உங்களுக்கு திருமணமானதா? எத்தனை குழந்தைகள், இப்போது கர்ப்பமாக இருக்குறீர்களா?" என பல அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளனர். அதேபோல திருமணமாகாத பெண்களிடமும் கர்ப்பம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படியொரு அதிர்ச்சியான சம்பவத்தை வெறும் உடல் தகுதி தேர்வுக்காக நடத்தப்பட்டது என்று எடுத்துக் கொள்ள முடியாது என்று கொதித்தெழுந்துள்ள மாநகராட்சி பணியாளர் சங்க செயலாளர் அகமது ஷேக், இதை கண்டித்து அறிக்கை விட்டதோடு மாநகராட்சி நிர்வாகத்திடமும் புகார் கொடுத்துள்ளார். இதன் பேரில், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, மருத்துவக் கல்லூரி முன்னாள் டீன் டாக்டர் கல்பனா தேசாய், மாநகராட்சி அதிகாரிகள் காயத்ரி, திருப்திகலாதியா ஆகிய மூவர் அடங்கிய விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பத்து நாட்களுக்குள் விசாரணை மேற்கொண்டு அறிக்கை கொடுக்க உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் தகுதி தேர்வு நடத்துவதின் விதிமுறைகள், பின்பற்றவேண்டிய வழிமுறைகள் ஆகியவற்றையெல்லாம் அறியாமல், உடல் தகுதி தேர்வு செய்ய வந்த அதிகாரிகள் ஆணவப் போக்கோடு செயல்பட்டுள்ளனர் என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இதற்கு முன்பு நடைபெற்ற சோதனைகள் அனைத்தும் சரியான வழிமுறைகளை பின்பற்றி செய்யப்பட்டதா அல்லது, இதேபோன்று தான் நடத்தப்பட்டதா எனவும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.