இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, டெல்லி, மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய அரசும் மாநிலங்களுக்கு தேவையான கரோனா தடுப்பூசிகள், ஆக்சிஜன் போன்றவைகளை விமானங்கள் மூலமும், ரயில்கள் மூலமும் அனுப்பி வைத்து வருகிறது.
இந்த நிலையில் குஜராத் மாநிலம், பாரூச்சில் அமைக்கப்பட்டிருந்த கரோனா சிறப்பு மருத்துவமனையில் இன்று (01/05/2021) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கரோனா நோயாளிகள் 14 பேர் மற்றும் செவிலியர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் பலர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து தொடர்பாக, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. .
இதனிடையே, மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 4 லட்சம் வழங்க உத்தரவிட்ட குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி, அவர்களின் குடும்பங்களுக்கும், மருத்துவ பணியாளர்களின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.