ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள வங்கி ஒன்றில் உதவி மேலாளராக வேலை செய்து வருபவர் மோகன கிருஷ்ணா. இவருக்கும் கர்னூல் மாவட்டம் நந்தியாலாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமணத்தன்று சினிமா பாணியில் தாலி கட்டுவதற்கு 10 நிமிடங்கள் முன்பாக கோயிலுக்கு வந்த போலீஸார் மோகன கிருஷ்ணாவிடம் சென்று, உங்கள் மீது புகார் வந்துள்ளது எனக் கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இரு வீட்டாரும் எதுவாக இருந்தாலும் தாலி கட்டிய பின் நடவடிக்கை எடுங்கள் எனக் கூறியுள்ளனர். அதை ஏற்காத போலீஸார், மோகன கிருஷ்ணாவிற்கு ஏற்கெனவே வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. அதை மறைத்து அவர் தற்போது திருமணம் செய்யப்போவதாக எங்களுக்கு ஆதாரத்துடன் புகார் வந்துள்ளது எனக் கூறி அவரைக் கைது செய்துள்ளனர். இதையடுத்து மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சியில் உறைந்துபோய் நிற்க, பெண் வீட்டார் கடைசி நிமிடத்தில் தப்பித்தோம் என அங்கிருந்து கிளம்பியுள்ளனர். இந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.