ஜனாதிபதி மாளிகையில் கவர்னர்கள் மாநாடு
டெல்லியில் 48-வது கவர்னர்கள் மாநாடு அக்டோபர் 12, 13 தேதிகளில் ஜனாதிபதி மாளிகையில் நடக்கிறது. இந்த மாநாட்டில் 27 மாநிலங்களில் கவர்னர்கள், 3 துணை நிலை கவர்னர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் துணை ஜனாதிபதி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், உள்ளிட்ட மத்திய மந்திரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கவர்னர்கள் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்படவேண்டும். மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக மாநில சட்டமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு பேசி மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபடவேண்டும். இந்தியாவின் வளர்ச்சி இளைஞர்களின் கையில்தான் உள்ளது. எனவே தேசத்தை கட்டி எழுப்பும் பணியில் இளைஞர்கள் சக்தியையும் ஈடுபடுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் முன்னேறினால்தான் ஒட்டுமொத்த இந்தியாவும் வளர்ச்சி அடையும். இதில் கவர்னர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. இவ்வாறு ராம்நாத் கோவிந்த் கூறினார்.