இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்கள் பல்வேறு கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன. மஹாராஷ்ட்ரா மாநிலம், 15 நாட்கள் பொது முடக்கத்தை அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்திலும் கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில், 18 ஆயிரத்து 21 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவிற்கு தற்போது கரோனா உறுதியாகியுள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ள அவர், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை, கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும், சில நாட்கள் தனிமையில் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.