
இரண்டு ஆண்டுகளுக்கு பின் நாடு முழுவதும் வழக்கமான விமான சேவைத் தொடங்கப்பட்டதையடுத்து, புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூரூ ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் புறப்பட்டு சென்றனர்.
ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை (பொறுப்பு) ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனை, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு பின் உள்நாட்டு விமானம் முதன்முறையாக ஓடுபாதையில் தரையிறங்கியதால், அதைக் கொண்டாடும் வகையில், விமானத்திற்கு தண்ணீர் பீய்ச்சியடித்து, சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், "மீண்டும் விமான சேவைத் தொடங்கப்பட்டதன் மூலம், புதுச்சேரியில் தொழில் மற்றும் சுற்றுலா மேம்படும். புதுச்சேரி விமான நிலையத்தின் விரிவாக்கம் பணிகளுக்காக, தமிழ்நாடு அரசு தாராளமாக, நிலம் வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.