ஆதார் மூலமாக 3 கோடி போலி ரேசன் அட்டைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் ஆண்டொன்றுக்கு அரசுக்கு ரூ.17ஆயிரம் கோடி மிச்சமாகி உள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் சி.ஆர்.சவுத்ரி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பொதுமக்கள் அனைவரும் தங்களது ரேசன் அட்டைகளை ஆதார் எண்ணோடு இணைப்பதைக் கட்டாயமாக்கியது. இதைத் தொடர்ந்து அனைவரும் ஆதார் எண்ணோடு ரேசன் அட்டைகளை இணைத்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் சி.ஆர்.சவுத்ரி பேசுகையில், நாட்டிலுள்ள 23 கோடி ரேசன் அட்டைகளில் 82 சதவீதம் ஆதாரோடு இணைக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் 3 கோடி அட்டைகள் போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.17ஆயிரம் கோடி மிச்சமாகிறது. இதன்மூலம் உணவு தானியங்கள் சரியான நபருக்கு கிடைக்கின்றன’ என தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சொல்வது ஒருபுறம் இருந்தாலும், பாஜக ஆளும் மாநிலங்களிலேயே ஆதார் எண்ணோடு ரேசன் அட்டையை இணைக்காத காரணத்தினால் உணவுப் பொருட்கள் மறுக்கப்பட்ட அவலங்கள் நடந்தேறின. ஆதார் முறையான திட்டமிடல் இன்றி நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.