கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் போர்டு கொச்சியைச் சேர்ந்த எட்டு நண்பர்கள் குழுவாக இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே உள்ள மலையிஞ்சி வனப்பகுதியில் உள்ள கிழார் குன்று என்ற அருவியில் குளிக்க முடிவெடுத்து சுற்றுலா சென்றுள்ளனர். அதன்படி மலையிஞ்சி வனப்பகுதி வரை கார் செல்லும் என்பதால் அங்கிருந்து வனப்பகுதிக்கு கூகுள் மேப் உதவியுடன் நீர்வீழ்ச்சியை நோக்கிச் சென்றுள்ளனர். அப்போது கூகுள் மேப் காட்டிய தவறான தகவலால் எதிர் திசையில் சுமார் 4 கி.மீ தூரம் அடர்ந்த வனத்தினுள் சென்றவர்கள் யானைகள் நடமாடும் பகுதியில் சிக்கி அங்கிருந்து மீண்டும் தங்கள் வந்த வழிக்கு திரும்ப இயலாமல் தவித்தனர்.
இந்நிலையில் நண்பர்கள் குழுவில் இருந்த ஜீஜூ ஜேம்ஸ் (வயது 35) என்பவர் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென பாறையில் இருந்து சுமார் 30 அடி பள்ளத்தில் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதனால் பலத்த காயம் அடைந்த அவரால் எழுந்து நடக்க கூட முடியவில்லை. இந்நிலையில் திருவனந்தபுரம் காவல்துறையினருக்கு அவருடன் சுற்றுலா வந்தவர்கள் தகவல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை உதவியுடன் காயமடைந்த ஜீஜூ ஜேம்ஸை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சுற்றுலா சென்றவருக்கு ஏற்பட்ட இந்த சம்பவம் வந்திருந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.