Skip to main content

மோடியை புகழ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் - உருவபொம்மையை எரித்த காங்கிரஸார்!

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

ghulam nabi azad

 

காங்கிரஸ் கட்சியில் 23 மூத்த தலைவர்கள் ஒரு குழுவாக இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் காங்கிரஸ் தலைமையின் முடிவுகளை எதிர்த்தும், விமர்சித்தும் வருகின்றனர். இவர்களில் கபில் சிபல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோரும் அடங்குவர். இவர்கள் ஜி-23 என அழைக்கப்படுகிறார்கள். இந்தநிலையில் ஜம்மு காஷ்மீரில், நேற்று (01.03.2021) ஜி-23 தலைவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய கபில் சிபல் உள்ளிட்டோர், ‘காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துவிட்டது’ எனக் கூறினர்.

 

இந்த நிகழ்வில் பேசிய குலாம் நபி ஆசாத், பிரதமர் மோடியைப் புகழ்ந்தார். இதுதொடர்பாக அவர், "நரேந்திர மோடியிடமிருந்து மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அவர் பிரதமரான போதிலும், அவர் தனது வேர்களை மறக்கவில்லை. அவர் பெருமையுடன் தன்னை ஒரு சாய்-வாலா (டீ விற்பனையாளர்) என்று அழைத்துக்கொள்கிறார். நாங்கள் அரசியல் போட்டியாளர்கள், ஆனால் அவர் தனது உண்மையான ரூபத்தை மறைக்கவில்லை என்பதை நான் பாராட்டுகிறேன்" எனத் தெரிவித்தார்.

 

ஏற்கனவே குலாம் நபி ஆசாத், பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கட்சிக்குள்ளேயே குரல் எழுந்து வரும் நிலையில், அவர் பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசியிருப்பது கட்சிக்குள் புயலைக் கிளப்பியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸார், குலாம் நபி ஆசாத்தின் உருவப்பொம்மையை எரித்து, அவருக்கு எதிராக முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், "காங்கிரஸ் அவரை மிகவும் மதித்தது. ஆனால் இன்று அதை ஆதரிக்க வேண்டிய நேரம் வந்தபோது, அவர் பாஜகவுடன் திருட்டுத்தனமாக நட்பை உருவாக்கிக் கொண்டுள்ளார். அவர் டிடிசி (ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தல்) தேர்தல்  பிரச்சாரத்திற்கு வரவில்லை, ஆனால் இப்போது அவர் இங்கு வந்து பிரதமரைப் புகழ்கிறார்" எனத் தெரிவித்தனர்.

 

சமீபத்தில், பதவிக்காலம் முடிவடைந்த மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றபோது, பிரதமர் மோடி கண்ணீர் மல்க குலாம் நபி ஆசாத்தைப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்