இந்தியாவில் கரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அண்மையில் பிரதமர் மோடியும், வளர்ந்து வரும் கரோனாவின் இரண்டாவது அலையை உடனடியாக நிறுத்த வேண்டும் என மாநில முதல்வர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். இருப்பினும் நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதுவரை இந்தியாவில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் வகை கரோனா வைரஸ்களால் 735 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில், பஞ்சாப் மாநிலத்தில், இங்கிலாந்தில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட, மரபணு மாற்றமடைந்த கரோனா பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீண்டும் மரபணு மாறிய புதிய வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இது வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பியவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. மரபணு மாறிய புதிய கரோனாவை 'Double Mutant Variant' என வகைப்படுத்தியுள்ளது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம். இந்தப் புதிய வகையான கரோனா குறித்தான ஆய்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.