அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம், ஜியோவில் ரூ.6598.38 கோடி முதலீடு செய்துள்ளது.
ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் தொழில்துறை முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், பல முன்னணி நிறுவனங்கள் திவாலாகி வருகின்றன. ஆனால் இதற்கு விதிவிலக்காக ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் இந்தக் காலகட்டத்தில் அதிக அளவிலான முதலீடுகளைப் பெற்று மற்ற தொழில் நிறுவனங்களை அசரவைத்துள்ளது. 5ஜி சேவை, ஜியோமார்ட் என அடுத்தடுத்த திட்டங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம், இவற்றை வைத்துப் பல வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகளைப் பெற்று வருகின்றன.
அந்த வகையில் ஜியோவில் ரூ.43,574 கோடி முதலீடு செய்து, 9.9 சதவீத பங்குகளை வாங்கியது ஃபேஸ்புக். அதனைத் தொடர்ந்து சில்வர் லேக் நிறுவனம் ஜியோவில் ரூ. 5,655 கோடி முதலீடு செய்து 1.5% பங்குகளை வாங்கியது. பின்னர் மற்றொரு பிரபல அமெரிக்க நிறுவனமான விஸ்டா நிறுவனம் ஜியோவில் ரூ.11,367 கோடி முதலீடு செய்து, அந்நிறுவனத்தின் 2.32 சதவீத பங்குகளை வாங்கியது. இந்நிலையில் தற்போது மற்றொரு அமெரிக்க நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் ஜியோவில் ரூ.6,598.38 கோடி முதலீடு செய்து அதன் 1.34% பங்குகளை வாங்கியுள்ளது. இதன்மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ.5.16 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த நான்கு வாரங்களில் மட்டும் சுமார் 67,000 கோடி ரூபாயை வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து முதலீடாகப் பெற்றுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.