கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான எம்.எம்.கல்புர்கி கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி தார்வாட்டில் உள்ள அவரது வீட்டில் அவரை சில அடையாளம் தெரியாத சில மர்மநபர்கள் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு பத்திரிகையாளரும், சமூக செயற்பாட்டாளருமான கவுரி லங்கேஷ் பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். மிக மோசமான இந்தப் படுகொலை குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வு பிரிவுக்கு அப்போதைய கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சி.ஐ.டி. அதிகாரிகள் இதற்கு முன்னர் கொல்லப்பட்ட நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே மற்றும் கல்புகர்கி ஆகியோரின் கொலை வழக்குகளோடு கவுரி லங்கேஷின் கொலைவழக்கும் ஒத்துப்போயுள்ளதாகக் கூறப்பட்டது.
கவுரி லங்கேஷ் கொலை சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இந்து யுவசேனா அமைப்பின் நிர்வாகி நவீன்குமார் (37) என்பவருக்கு இந்தக் கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரைக் கைதுசெய்த சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு கடந்த 5 ஆண்டுக்கு மேலாக வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கு மெதுவாக நடப்பதாகவும், சிறப்பு நீதிமன்றத்தை அமைத்து முழு நேர நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று கவுரி லங்கேஷின் சகோதரி கவிதா லங்கேஷ் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து, முதல்வர் சித்தராமையா நேற்று (06-12-23) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி, பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் ஆகியோரின் கொலை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர். அதன் பேரில் இருவரது கொலை வழக்குகளையும் விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, இரு வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கவும், முழு நேர நீதிபதியை நியமிக்கவும் சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீலுக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.