தெலங்கானா மாநிலத்தில் "கரீம் நகர்" நகராட்சி மரணமடைந்தவர்களுக்கு ஒரு ரூபாயில் இறுதிச்சடங்கு நடத்த திட்டமிட்டுள்ளது. நடுத்தர வகுப்புக்கு கீழ் இருப்பவர்களுக்கும், வறுமையில் விளிம்பில் இருக்கும் குடும்பத்திற்கும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. "அண்டிம் யாத்ரா அக்ரி சஃபார்" என்ற பெயரில் கரீம் நகர் நகராட்சி இந்த திட்டத்தை ஜூன் 15 முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இது குறித்து செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த கரீம் நகர் மேயர் ரவீந்தர் சிங், மூன்று மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும். இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வது, பூஜைகள், இறுதிச்சடங்குகளை செய்வது, எரிக்க மரக்கட்டைகள், மண்ணெண்ணெய் அளிப்பது, முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்த்துவர்களுக்கு உடல்களைப் புதைக்க உதவுவது என அனைத்துப் பணிகளையும் செய்து கொடுக்க உள்ளோம். இதற்கு 1 ரூபாய் செலுத்தினால் போதும். ஏழைகளும், முடியாதவர்களும் கூட, இறந்த பிறகு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே எங்களின் ஆசை. இதற்கு சாதி, மதம் பிரச்சனை இல்லை. ஒரு ரூபாய் செலுத்தி ரசீதைப் பெற்றுக்கொண்டால் போதும்.
இந்த நகராட்சியில் பணிபுரியும் 2 ஆயிரம் ஊழியர்கள் தங்கள் பகுதிகளில் இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். உடலை வைக்கத் தேவைப்படும் வீடுகளுக்கு குளிர்பதனப் பெட்டியையும், இலவசமாக வழங்க உள்ளோம். 50 நபர்களுக்கு இலவச உணவும் உண்டு. இந்த உணவு தெலங்கானா உணவு திட்டம் ரூபாய் 5 கீழ் வழங்கப்படும்.
உடனடி இறப்புச் சான்றிதழ்
அதே போல் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் இறப்புச் சான்றிதழுக்காக அலைய வேண்டியதில்லை. இறுதிச்சடங்கை முடித்த கையோடு இறப்பு சான்றிதழை வழங்கி விடுவோம். இந்தத் திட்டத்திற்கு ஆரம்ப கட்டமாக ரூபாய் 1.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் ரவீந்தர் சிங். இந்த திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் அனைவரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.