இந்து மதத்தைப் பற்றியும், இந்து பெண்கள் பற்றியும் தவறாகப் பேசியதாக தி.மு.க. எம்.பி ஆ.ராசாவைக் கண்டித்தும், அவர் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், புதுச்சேரியில் இன்று (27/09/2022) ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு இந்து முன்னணியினர் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி, இன்று புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
முழு அடைப்பு போராட்டம் காரணமாக, புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. அரசு பள்ளிகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், புதுச்சேரியில் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசு பேருந்துகள் மட்டும் காவல்துறை பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல், இருக்க மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் பகுதியில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் சென்ற தமிழ்நாடு அரசு பேருந்து மற்றும் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வந்த அரசு பேருந்து என இரண்டு பேருந்துகளின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பேருந்தின் மீது கல்வீசி தாக்கியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பொதுச் சொத்தை சேதப்படுத்துவர்கள் மற்றும் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும் புதுச்சேரியில் இருந்து செல்லும் அரசு பேருந்துகள் அனைத்தும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது.
இதனிடையே பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு காலாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், புதுச்சேரி உப்பளத்திலுள்ள இமாகுலேட் தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளி வழக்கம் போல் இயங்கியது. இது குறித்து அறிந்த பா.ஜ.க கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிசெல்வம் மற்றும் இந்து முன்னணியினர் பள்ளி நிர்வாகத்திடம் சென்று பள்ளியை மூடக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து, அங்கு வந்த பெற்றோர்கள் பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களை வெளியேறுமாறு கூறி முழக்கமிட்டனர். இதனைத் தொடர்ந்து முழக்கமிட்டவாறே பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
திடீரென பெற்றோர்களுக்கும், இந்து முன்னணி, பா.ஜ.க நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.