ராஷ்ட்ரீய லோக் தள கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஜித் சிங்குக்கு செய்யப்பட்ட கரோனா மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவர் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி டெல்லி குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று (06/05/2021) காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 82.
முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங் குறித்து பார்ப்போம்!
முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் மகனான அஜித் சிங், ஏழுமுறை மக்களவை உறுப்பினராக பணியாற்றியவர். முன்னாள் பிரதமர்கள் வி.பி. சிங், நரசிம்ம ராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோரின் அமைச்சரவைகளில் இடம்பெற்றிருந்தவர். உணவுத்துறை, உணவு பதப்படுத்துதல் துறை, வணிகத்துறை உள்ளிட்ட துறைகளில் மத்திய அமைச்சராக அஜித் சிங் பணியாற்றியுள்ளார். அஜித் சிங் உத்தரப்பிரதேச அரசியலில் நுழையும் முன் அமெரிக்காவில் 15 ஆண்டுகள் கம்ப்யூட்டர் துறையில் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் சிங் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.