கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி. இவர் கடந்த திங்கட்கிழமை (15.02.2021), “அயோத்தியில் கட்டப்படும் இராமர் கோவிலுக்கு நிதி திரட்டுபவர்கள், நிதி அளித்தவர்களின் வீடுகளையும், நிதி அளிக்காதவர்களின் வீடுகளையும் தனித்தனியாக அடையாளப்படுத்தி வருவதாக தெரிகிறது. இது, ஹிட்லர் ஆட்சியில் லட்சக்கணக்கான மக்கள் இறந்தபோது நாஜிக்கள் செய்ததைப் போல் உள்ளது,” எனத் தெரிவித்திருந்தார்.
இது சர்ச்சைக்குள்ளான நிலையில், இராமர் கோயிலுக்கு நிதி கேட்டு தான் மிரட்டப்பட்டதாகக் கூறி, குமாரசாமி தற்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர், "இராமர் கோவிலுக்கு நிதியளிப்பது பற்றி எனக்கு கவலையில்லை. தேவைப்பட்டால் நானும் பங்களிப்பேன். ஆனால் உண்மையில் யார் தகவல் தருகிறார்கள்? பணம் சேகரிப்பதில் வெளிப்படைத்தன்மை எங்கே? பலர் மற்றவர்களை மிரட்டி பணம் வசூலித்து வருகிறார்கள். நானும் ஒரு பாதிக்கப்பட்டவன், ஒரு பெண் உட்பட 3 பேர் எனது வீட்டிற்கு வந்தனர். இது நாட்டின் முக்கியமான பிரச்சனை. நீ ஏன் பணம் கொடுக்கவில்லை என மிரட்டினர். அந்தப் பெண் யார்?. என்னிடம் பணம் கேட்பதற்கு அவருக்கு அதிகாரம் உள்ளதா?" எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
இராமர் கோயிலுக்கு நிதி கேட்டு மிரட்டப்பட்டதாக ஒரு மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.