புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில், புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் ரங்கசாமி உட்பட நான்கு அமைச்சர்கள் பதவி வகித்து வருகின்றனர். காரைக்கால் நெடுங்காடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான சந்திர பிரியங்காவுக்கு போக்குவரத்துத் துறை, ஆதி திராவிடர் நலம், வீட்டு வசதி உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டு அமைச்சராகச் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், திடீரென அவர் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். மேலும், அந்தக் கடிதத்தில் அவர், “தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வந்தால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என பொதுவாக கூறுவார்கள். தலித், பெண் என இரு பெருமைகளோடு இருந்த எனக்கு அதுதான் மற்றவர்களின் உறுத்தல் என்பது தெரியாமல் போனது” எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் அளித்த அவரது ராஜினாமா கடித விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “4 நாட்களுக்கு முன்பு முதல்வர் ரங்கசாமி துணை நிலை ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர், சந்திர பிரியங்காவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், திருமுருகனை அமைச்சராக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்துள்ளார். அந்த கடிதம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சென்று பின்பு ஒப்புதல் பெற்று புதுச்சேரிக்கு வந்துள்ளது. இதை அறிந்த சந்திர பிரியங்கா தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு கொடுத்துள்ளார்.
ஒரு பெண் அமைச்சரை அசிங்கப்படுத்தியிருக்கின்றனர். ஒரு அமைச்சர் எவ்வளவு வேதனைப்பட்டிருந்தால் மன வேதனையோடு அந்த கடிதத்தை எழுதி இப்படி ஒரு அறிக்கையை கொடுத்திருப்பார். ஆணாதிக்கத்தை கொண்டு தனிப்பட்ட பிரச்சனைகளை முன் வைத்து பழிவாங்குகின்றனர். தனது கட்சியில் பாலியல் ரீதியாகவும், சாதிய ரீதியாகவும் தொல்லை கொடுத்துள்ளதாக அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். இது என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சியின் சுயரூபத்தை காட்டுகிறது.
அதனால், ரங்கசாமி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி ஏன் வாய்மூடி அமைதியாக இருக்கிறார்?. பெண்ணுரிமை குறித்து வாய் கிழிய பேசும் துணை நிலை ஆளுநர் தமிழசை செளந்தரராஜன் இந்த விவகாரத்தில் பெட்டி பாம்பாக அடங்கி கிடப்பது ஏன்?. மத்தியிலும், மாநிலத்திலும் பெண்கள் விரோத ஆட்சி நடக்கிறது. புதுச்சேரியை பொறுத்தவரை ரங்கசாமியும், பா.ஜ.கவும் பட்டியல் சமூகத்தினரை புறக்கணித்து வருகிறது” என்று கூறினார்.