தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அதேபோல் மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஏழு கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், நாளை மறுநாள் (29/04/2021) எட்டாம் மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகளும் அறிவிக்கப்படுகின்றன. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது கரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாகக் கடைபிடிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று (26/04/2021) தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, "கரோனா பரவ தேர்தல் ஆணையமே காரணம்; வாக்கு எண்ணிக்கை நாளன்று அனைத்து கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருக்க வேண்டும்; இல்லையென்றால் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க நேரிடும்" என்று எச்சரித்திருந்தனர்.
இதையடுத்து, தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (27/04/2021) உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், “கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் மே 2ஆம் தேதி அன்று வாக்கு எண்ணும்போது முன்னிலை பெறும்போதும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் அரசியல் கட்சியினரின் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.