இந்தியா முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளிக்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சரவெடியை வெடிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டாசுகளை வெடிக்கும்போது கைகளில் சானிடைஸர் உபயோகிக்கக்கூடாது, குழந்தைகள் பெரியவர்களுடன் இணைந்து பட்டாசுகளை வெடிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதுச்சேரி மாநிலம் அரியான்குப்பத்தில் இருந்து கலைநேசன் என்பவர் தனது மகனுடன் விழுப்புரத்திற்கு இன்று பிற்பகல் சென்றுள்ளனர். இவர் தனது வாகனத்தில், நாட்டு வெடிகளை எடுத்துச் சென்றுள்ளார். இவர்களது வாகனம் புதுச்சேரி - சென்னை, கிழக்கு கடற்கரைச் சாலையைக் கடந்தபோது பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதில் தந்தை மகன் இருவரும் உடல் சிதறி பரிதாபமாக பலியானர். இவர்களது உடல் சம்பவம் நடந்த இடத்திலிருந்து வெகு தொலைவுக்குத் தூக்கிவீசப்பட்டுள்ளது. அதேசமயம் கலைநேசன் வாகனத்திற்கு நேர் எதிரே வந்த மற்றொரு வாகனமும் விபத்துக்குள்ளாகி அந்த வாகனத்தில் வந்தவர்களும் படுகாயம் அடைந்துள்ளனர். சம்பவம் குறித்து தகவல் சென்றதும் காவல்துறையினர் அங்கு விரைந்துவந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.