வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஒரு வருடமாக விவசாயிகள், டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அண்மையில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக அண்மையில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டது. இருப்பினும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம், போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
இந்தச்சூழலில் மத்திய அரசு விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்பதாக எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. குறைந்தபட்ச ஆதார விலை விவகாரத்தில் கமிட்டி அமைப்பதாகவும், விவசாயிகளுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் கை விடுவதாகவும், பயிர் கழிவுகள் எரித்ததற்காக பதியப்பட வழக்குகளைக் கைவிடுவதாகவும், பஞ்சாப் அரசு தங்கள் மாநில விவசாயிகளுக்கு இழப்பீடு அளித்தது போல், உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் மத்திய அரசின் இந்த உத்தரவாதம் தொடர்பாக ஆலோசித்த விவசாயிகள், போராட்டத்தை கைவிடுவது குறித்து நாளை முடிவெடுக்கப்படும் எனக் கூறியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள், நாங்கள் போராட்டத்தை முடித்த பிறகே, விவசாயிகளுக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெறுவோம் என்று அரசாங்கம் கூறுகிறது... நாங்கள் அதைப் பற்றி அச்சப்படுகிறோம். வழக்குகளை திரும்பப்பெறும் நடைமுறையை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும். நாளை மதியம் 2 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் (போராட்டத்தை கைவிடுவது) இறுதி முடிவு எடுக்கப்படும். 700க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீட்டிற்கு வழங்குவதில் மத்திய அரசு பஞ்சாப் மாதிரியை பின்பற்ற வேண்டும் என விரும்புகிறோம். பஞ்சாப் அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.5 லட்சம் இழப்பீடு மற்றும் வேலை என்பதை இந்திய அரசும் செயல்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர்.