பெண் சாமியாருக்கு போலீஸ் நிலையத்தில் மரியாதை!
குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ள நிலையில் பெண் சாமியாரை தனது இருக்கையில் அமரவைத்த டெல்லி இன்ஸ்பெக்டர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் பிறந்தவர் ராதே மா என்னும் சுக்விந்தர் கவுர். 4-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ராதே மா, 23 வயதில் மஹந்த் ராம் தீன் தாஸின் சீடரானார். பின்னர் மும்பை வந்த ராதே மா, ஆசிரமம் தொடங்கி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிப் பிரபலமானார். வரதட்சணை கொடுமை, பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாமியார் ராதே மா மீது புகார் உள்ளது.
கடந்த 28ம் தேதி டெல்லியில் நடந்த ராம்லீலா நிகழ்ச்சிக்கு சாமியார் ராதே மா வந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாப்பு காரணமாக அவரை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்ததாக இன்ஸ்பெக்டர் சஞ்சீவ் சர்மா விளக்கம் அளித்துள்ளார். எனினும் சாமியாருக்கு தனது இருக்கையை கொடுத்த இன்ஸ்பெக்டர் மீது டெல்லி உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.