Skip to main content

திஹார் சிறையில் ஃபேஷன் பயிற்சி வகுப்புகள் - ரேம்ப் வாக் மாடல்களாக சிறைவாசிகள்!

Published on 11/09/2017 | Edited on 11/09/2017
திஹார் சிறையில் ஃபேஷன் பயிற்சி வகுப்புகள் - ரேம்ப் வாக் மாடல்களாக சிறைவாசிகள்!

திஹார் சிறையில் சிறைதண்டனை அனுபவித்து வரும் பெண்கள், அதே சிறையில் நடைபெற்ற ஃபேஷன் நிகழ்ச்சியில் வளைந்த நடை என சொல்லப்படுகிற ரேம்ப் வாக்கில் நடந்துவருகின்றனர். வெறும் நடை மட்டுமல்ல, சான்றிதழுடன் கூடிய ஃபேஷன் படிப்பையும் அவர்கள் வெற்றிகரமாக முடித்துள்ளனர் சிறைக்குள்ளேயே.



சிறை சென்று திரும்புபவர்களுக்கு வாழ்க்கையை நடத்துவதற்கு எந்தவகையிலும் வாய்ப்புகள் மறுக்கப்படும் நிலையில், ஃபேஷன் படித்துவிட்டு வெளியேறும் பெண் சிறைவாசிகள் தங்கள் சொந்தவாழ்க்கையைத் தீர்மானிப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம் திஹார் ஃபேஷன் ஆய்வகம் என்ற அமைப்பின்கீழ் தொடங்கப்பட்ட ஃபேஷன் வகுப்புகள் செப்டம்பர் 9ஆம் தேதி நிறைவடைந்தன. இந்த வகுப்புகளில் திஹார் சிறையிலுள்ள பெண் சிறைவாசிகள் 20 பேர் பயிற்சி எடுத்துக்கொண்டனர். 

இந்த பயிற்சி வகுப்புகளில் அவர்களுக்கு இந்திய உடை கட்டமைப்பு மற்றும் உடை மாதிரி தயாரித்தல் குறித்த பாடங்கள் எடுக்கப்பட்டுள்ளன. பயிற்சி வகுப்புகள் முடிந்துள்ள நிலையில், அந்தப்பெண்கள் 20 பேரும் தாங்கள் வடிவமைத்த உடைகளை அணிந்துகொண்டு ரேம்ப் வாக் நடந்தனர்.

இவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய சிறைத்துறை அதிகாரி, ‘இந்த பயிற்சி வகுப்புகள் சிறைவாசிகளின் வாழ்க்கையையே மாற்றியுள்ளது. ஒரு கல்விநிறுவனம் நம்மோடு இணைந்து பயிற்சி வகுப்புகளை நடத்துவது இதுவே முதன்முறை. இந்த பயிற்சியின் மூலம், பெண்கள் வெளியில் சென்று தங்களது தரமான வாழ்க்கையை சுதந்திரமான முறையில் அமைத்துக்கொள்ள முடியும்’ என கூறியுள்ளார்.

நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பயிற்சி வகுப்புகளின் அடுத்த தொகுதிக்கான தேதிகள் கூடியவிரைவில் வெளியிடப்படும் என சிறைத்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்