மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நூறு நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். டெல்லியின் எல்லைப்பகுதிகளில் முகாம் அமைத்து தங்கியுள்ள அவர்கள், மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாதவரை வீடு திரும்பப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றனர். மேலும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி சாலை மறியல், இரயில் மறியல் போன்ற போராட்டங்களிலும் ஈடுபட்டனர். மேலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக குடியரசு தினத்தன்று விவசாயிகள் ட்ராக்டர் பேரணியும் நடத்தினர்.
இதற்கிடையே விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதில் விவசாயிகளும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்பதில் மத்திய அரசும் உறுதியாக இருந்ததால் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.
அதன்பிறகு கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. அதேநேரம், கரோனா இரண்டாவது அலையிலும்கூட விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க கூறி, பிரதமர் மோடிக்கு விவசாயிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டு அமைப்பான சம்யுக்ட் கிசான் மோர்ச்சா, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், வேளாண் சட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தையைத் திரும்பப் பெறக் கோரியுள்ளதோடு, "பிரதமர் அவர்களே, உலகின் மிகப்பெரும் ஜனநாயக அரசாங்கத்தின் தலைவராக, விவசாயிகளுடன் தீவிரமான மற்றும் நேர்மையான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான பொறுப்பு உங்களிடம் உள்ளது என்பதை உங்களுக்கு நினைவுபடுத்தவே இந்தக் கடிதம்" என கூறியுள்ளனர்.