Skip to main content

முன்னோக்கி நகரும் விவசாயிகள்; புகை மண்டலமான டெல்லி எல்லை

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Farmers moving forward; Smog zone Delhi border

மத்திய அரசு சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியான விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக் கோரி டெல்லியில் இன்று (13.02.2024) விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த சூழலில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி நேற்று (12.02.2024) மாலை சண்டிகரில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, பியூஸ் கோயல், நித்தியானந்தா ராய் ஆகியோர் பங்கேற்றனர். சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.

இதனால் திட்டமிட்டபடி விவசாயிகள் பேரணியைத் தொடங்கியுள்ளனர். அவர்களைத் தடுப்பதற்காகத் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் டெல்லி எல்லையே புகை மண்டலமாக மாறி உள்ளது. கோதுமை, நெல் உள்ளிட்ட தானியங்களுக்கு ஆதரவு விலை இருமடங்காக உயர்த்தப்படும் என்று பாஜக உறுதியளித்திருந்தது. விவசாயிகள் வருமானத்தை இருமடங்காக உயர்த்தும் வாக்குறுதியையும் பாஜக அரசு அளித்திருந்தது. அதை நிறைவேற்றாததால் விவசாயிகள் இந்த பேரணி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டமானது தொடங்கியுள்ளது. விவசாயிகள் போராட்டத்தால் டெல்லி சாலைகளில் ஆயிரக்கணக்கான கார்கள் நகர முடியாமல் இருப்பதால் ஒருபுறம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளது டெல்லி எல்லை.

சார்ந்த செய்திகள்