வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 100 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ட்ராக்டர் பேரணி, சாலை மறியல், ரயில் மறியல், உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டாலும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறப்போவதில்லை என்ற முடிவில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது.
விவசாயிகளும் மோடி அரசின் ஆட்சி முடியும்வரை போராடுவதற்குத் தயார் எனத் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், வரும் மார்ச் - ஏப்ரலில் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அஸாம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்யவுள்ளதாக ஏற்கனவே விவசாயிகள் அறிவித்திருந்த நிலையில், பிரச்சாரத்தை மேற்கொள்ள குழு அமைக்கப்படும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து சண்டிகரில் பேசிய விவசாய சங்கத் தலைவர் பல்பீர் சிங் ராஜேவால், "விவசாயிகளின் போராட்டம் ஆரம்பித்து 105 நாட்கள் ஆகின்றன. தேர்தல் நடைபெறவிருக்கும் 5 மாநிலங்களுக்கும் செல்ல குழுக்களை அமைக்க முடிவு செய்துள்ளோம். மக்கள் பாஜகவை தவிர்த்து யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும். நான் கொல்கத்தாவிற்குச் செல்லவுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.