பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில், அதனைக் கண்டுகொள்ளாமல் பா.ஜ.க தலைவர்கள் அந்நிகழ்ச்சியில் உரையாற்றியதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள முண்டியில் நேற்று, பாஜக எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மேடையில் பா.ஜ.க தலைவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கையில், ஜீவன் சிங் என்ற 70 வயதான விவசாயி திடீரென மயக்கமடைந்து நாற்காலியிலிருந்து சரிந்து விழுந்தார். இதையடுத்து அங்கிருந்து நபர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், ஜீவன் சிங் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அவர் மாரடைப்பால் இறந்தார் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், இதனைச் சுட்டிக்காட்டி பாஜகவை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சியின் அருண் யாதவ், "விவசாயி இறந்த பின்னரும் தலைவர்கள் தொடர்ந்து உரை நிகழ்த்தினர். பாஜகவின் மனநிலையும் மனிதநேயமும் இதுதானா" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.