கடந்த சில மாதங்களாகவே குண்டு வெடிப்புகள் குறித்த செய்திகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம் 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் முகமது ரியாஸ், முகமது தல்கா, முகமது நவாப் இஸ்மாயில், முகமது அசாருதீன், ஃபிரோஸ் இஸ்மாயில் உள்ளிட்ட ஆறு பேரும் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர்.
அதே போல் கர்நாடகா மாநிலத்தில் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள மங்களூருவில் கடந்த 19/11/2022 அன்று மாலை ஒரு ஆட்டோ திடீரென வெடித்துச் சிதறியது. பின்னர் அதில் வெடித்தது குக்கர் வெடிகுண்டு என்பது விசாரணையில் தெரிய வந்தது. ஆட்டோவிலிருந்த இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தேசிய அளவிலான சதி இருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகங்கள் எழுந்த நிலையில், தேசிய புலனாய்வுத் துறையின் அதிகாரிகளும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் இந்தியன் பப்ளிக் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் என்பது புரளி என்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து போலிச் செய்தியைப் பரப்பியவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மின்னஞ்சலில் வந்த வெடி குண்டு மிரட்டல் செய்தியால் அந்த வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.