‘என்னுடன் பாலியல் உறவு கொண்டால் பாசிடிவ் எனர்ஜி கிடைக்கும்,’ என கூறி பெண்களை துன்புறுத்திய போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர். இது பற்றி தெலங்கானா மாநிலம், நல்லகொண்டா மாவட்டத்தில் டி.ஐ.ஜி ஏ.வி.ரங்கநாத் கூறியதாவது, “தெலங்கானா மாநிலம், நல்லகொண்டா மாவட்டம், பி.ஏ.பள்ளி அடுத்த அஜ்மாபூர் கிராமத்தில் ‘ஸ்ரீ சாய் சர்வஸ்வாமு சாய் மான்சி தொண்டு அறக்கட்டளை’ என்ற பெயரில் ஆசிரமம் அமைத்து பக்தர்களிடம் யாகம், பூஜைகள் செய்வதாக கூறி ஏமாற்றி போலி சாமியார் சாய் விஸ்வ சைதன்யா பணம் பறித்துள்ளார். மேலும், பல பெண் பக்தர்களை வசியப்படுத்தி தகாத உறவு வைத்துள்ளளார். ‘சாய்பாபாவின் தீர்க்க தரிசனம்’என்ற பெயரால் வசதியான பக்தர்களை ஈர்த்து பணம் பறித்துள்ளார். போலி மூலிகைகள், லேகியம், எண்ணெய் ஆகியவற்றை உடல் நலக்குறைவு உள்ளவர்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று விற்பனை செய்துள்ளார்.
ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் நந்திகாமாவை சேர்ந்த இவர், ஐதராபாத்தில் கடந்த 2002ம் ஆண்டு கம்யூட்டர் மையத்தை அமைத்துள்ளார். பொதுமக்களிடம் சீட்டு பிடிப்பதாக கூறி 1 கோடி பெற்று ஏமாற்றியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த இவர், சாய்பாபா பக்தராகி தனியார் தொலைக்காட்சியில் சொற்பொழிவு ஆற்றினார். இதையடுத்து, தீர்க்க தரிசனம் என்ற பெயரில் வீடியோக்கள் எடுத்து தானாக ஒரு யூடியூப் சேனலை தொடங்கினார். என்னுடன் உடலுறவு கொண்டால் பாசிடிவ் எனர்ஜி கிடைக்கும் என கூறி பல பெண்களுடன் ஆசிரமத்தில் பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளார்.
புகார்கள் அடிப்படையில் சைதன்யா, அனந்தபுரத்தை சேர்ந்த வீடியோ எடிட்டர் கவுதம், டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக இருந்த கம்மத்தை சேர்ந்த ஸ்ருஜன் குமார், ஆக்குதோடப்பள்ளியை சேர்ந்த டிரைவர் விஜய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், இவர்களிடம் இருந்து 26 லட்சம் ரொக்கம், 500 கிராம் தங்க நகைகள், போலி சாமியாரின் 2வது மனைவி சுஜாதா மீது உள்ள 1.50 கோடி மதிப்பிலான பத்திரங்கள், 17 ஏக்கர் நிலம், யூடியூப் சேனலுக்கு பயன்படுத்திய 7 லேப்டாப்கள், 4 செல்போன்கள், 1 கார் பல்வேறு வகையான மூலிகைகள், பூஜை பொருட்கள், 50 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.