ஜியோ நிறுவனத்தின் 9.9 சதவீத பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது ரூ.43,574 கோடியை ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்து, அந்நிறுவனத்தின் 9.9 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது ஃபேஸ்புக்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜியோ நிறுவனத்தின் மொத்த மதிப்பு 4.6 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜியோ நிறுவனத்தில் அதிக பங்குகளை வைத்திருக்கக்கூடிய சிறு முதலீட்டாளர் என்ற அந்தஸ்தை ஃபேஸ்புக் நிறுவனம் பெற்றுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் கால்பதிக்கத் தயாராகி வரும் ஜியோ நிறுவனம், அதற்காக ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்திவந்த நிலையில், தற்போது இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜியோவின் ஆன்லைன் வர்த்தகப் பிரிவான ஜியோ மார்ட், தங்களது வணிகத்தைப் பெருக்க வாட்ஸப் மூலம் மக்களைக் கவரத் திட்டமிட்டு வந்த சூழலில், அதற்கான அடித்தளமாகவே இந்த முதலீடு நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கரோனா வைரஸ் பாதிப்பால் சரிவில் இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மதிப்பை உயர்த்தவும் இந்த ஒப்பந்தம் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.