இன்றைய நிலவரப்படி அண்டை மாநிலமான கேரளாவில் கரோனா பாஸிட்டிவ் எனக் கண்டறியப்பட்டு கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சையில் இருப்பவர்கள் 241 பேர். இவர்களில் தற்போது வரை இரண்டு பேர் மரணமடைந்துள்ளனர் என்று அம்மாநில சுகாதாரத்துறையின் அறிவித்துள்ளது. இவர்கள் தவிர மாநிலம் முழுவதிலும் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தைத் தாண்டுகிறது.
எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். கரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்குமானால் அதனைச் சமாளிக்கவும், சிகிச்சைக்காகவும் மாநிலம் முழுவதிலும் மருத்துவ உபகரணங்களுடன் 90 ஆயிரம் படுக்கைகளைக் கடந்த வாரமே தயார் செய்திருக்கிறார் கேரள முதல்வரான பினராய் விஜயன்.
கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்ததால் கேரளாவிற்கு பிழைப்பின் பொருட்டு கூலி வேலைகளுக்காக மேற்கு வங்கம், பீகார், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து வந்த ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பீதியால் தங்கள் மாநிலத்திற்குத் திரும்பத் தொடங்கினர்.
லட்சத்திற்கும் மேற்பட்ட பிற மாநில தொழிலாளர்களால் ஊர் திரும்ப முடியவில்லை. அவர்கள் அன்றாடம் தங்குவதற்கும் உணவிற்காகவும் தவித்துள்ளனர். அவர்கள் பற்றிய நிலவரம் அறிந்த பினராய் விஜயன் அவர்களுக்காக அந்தந்த மாவட்டங்களில் கலெக்டரின் நேரடி கண்காணிப்பில் முகாம்களை அமைத்துத் தங்கவைத்து, தினமும் தேவையான உணவுகளை வழங்கிப் பராமரித்து வருகிறார்.
முகாம் என்றாலும் கேரளா அரசு எங்களைக் குறைவின்றிப் பராமரித்து வருவதை நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார் கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர். கரோனாவை எதிர்த்து முழுவீச்சில் மாநிலங்கள் போராடிக் கொண்டிருக்கிற நேரத்தில் இது போன்றவைகளைச் சந்திக்க வேண்டிய சவாலுமிருக்கிறது.