ஹைதராபாத்தில் பிரியாணி ஆர்டர் செய்த இளைஞரிடம் 50,000 மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த ஐடி இளைஞர் ஒருவர் சொமேட்டோ ஆப்பின் மூலம் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். 40 நிமிடம் கழித்து டெலிவரி பாய் கொடுத்த பிரியாணியை பிரித்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக பிரியாணி ஆர்டர் செய்த அவருக்கு புளி சாதம் வந்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த அவர், இணையதளத்தில் சொமேட்டோ கஸ்டமர் சேவை மையத்தின் தொலைபேசி எண்ணை தேடியுள்ளார். அதில் குறிப்பிட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது எதிர் முனையில் பேசிய இளம்பெண் "உங்கள் தொலைபேசிக்கு ஒரு கியூஆர் கோடு ஒன்று வரும். அதனை ஸ்கேன் செய்த உடன் உங்களின் வங்கி கணக்கில் பணம் திரும்ப வந்துவிடும்" என்று கூறியுள்ளார். இளைஞரும் சில நொடிகளில் வந்த கியூஆர் கோடை ஸ்கேன் செய்துள்ளார். ஸ்கேன் செய்த உடனே அவருடைய வங்கி கணக்கில் இருந்து 50,000 ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதனால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தங்களுக்கு எவ்வித வாடிக்கையாளர் சேவை மையமும், தொலைபேசியும் இல்லை என்று பல மாதங்களுக்கு முன்பே சொமேட்டோ நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.