கர்நாடக மாநிலத்தில் இருந்து ஜார்க்கண்டிற்கு கூட்டிச் செல்லப்பட்ட யானைகளுக்கு, இந்தி கற்றுத் தரப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் கர்நாடக மாநிலத்தில் இருந்து கால பைரவா, சீதா மற்றும் குட்டி முருகேசன் உள்ளிட்ட மூன்று யானைகள், ஜார்க்கண்டில் உள்ள பலாமு புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவைகளுக்கு ரோந்துப் பணியில் ஈடுபடுவதுதான் முழுநேர வேலை. ஒவ்வொரு யானைக்கும் தனித்தனி பாகன்களும் நியமிக்கப்பட்டனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திபூர் தேசிய பூங்காவில் பிறந்து வளர்ந்த இந்த யானைகளுக்கு, கன்னடாதான் ‘தாய்மொழி’ என்பதால், யானைகளுடன் புதிய பாகன்களால் எளிமையாக தொடர்புகொள்ள முடியாமல் போனது. விலங்குகளில் குறிப்பாக யானைகள் ஒலிப்பியல் மற்றும் உடல்மொழியை வைத்து மட்டுமே தகவல்களைப் புரிந்துகொள்ளும். இந்தி மற்றும் கன்னடா இடையே ஒலிப்பியல் வேறுபாடுகள் அதிகம் இருப்பதால், ஜார்க்கண்டைச் சேர்ந்த பாகன்களின் கட்டளைகளை இந்த யானைகள் ஏற்க மறுக்கின்றன.
வெறுமனே ரோந்துப்பணி மட்டுமின்றி உணவு, குளியல் என மற்ற வேலைகளுக்கும் மொழி அத்தியாவசியமாக இருப்பதால், ஜார்க்கண்ட் புலிகள் காப்பகத்தில் இருக்கும் இந்த யானைகளுக்கு இந்தி கற்றுத்தர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், முன்னாட்களில் யானைகளை கவனித்துக் கொண்ட பாகன்கள், தற்போதைய பாகன்களுக்கு கன்னட மொழி கற்றுத்தரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வனவிலங்கு ஆர்வலர் ஸ்ரீவத்சவா, ‘பொதுவாகவே யானைகள் தங்களது பாகன்களோடு மிக நெருக்கமாக பழகக்கூடியவை. அவர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம் என்பது மிகச்சிக்கலானதாக இருக்கும். அதனால், புதிய பாகன்களோடு அவை பழகுவதற்கே அதிக நேரம் பிடிக்கும்’ என தெரிவித்துள்ளார்.