இந்தியாவில் ஏற்பட்ட கரோனா பரவல், ஏழை மக்களை மிகக் கடுமையாகப் பாதித்தது. உயிரிழப்புகளை மட்டுமின்றி கடும் பொருளாதார பாதிப்பையும் ஏழை மக்கள் சந்தித்தனர். இதனைத்தொடர்ந்து ஏழைகளுக்குப் பயனளிக்கும் வகையில் மத்திய அரசு, பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தைச் செயல்படுத்தியது.
இந்த திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு, மாதந்தோறும் ஐந்து கிலோ இலவச அரிசி அல்லது கோதுமை மற்றும் கொண்டைக்கடலை ஆகியவை ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. முதலில் 2020 ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட இத்திட்டம், அதன்பிறகு இந்தாண்டு நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டது.
இந்தநிலையில் உணவுத்துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே, நவம்பர் மாதத்திற்குப் பின்னர் பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை நீட்டிக்க மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். பொருளாதாரம் மீண்டு வருவதாலும், திறந்த சந்தை விற்பனை திட்டக் கொள்கையின் கீழ் திறந்த சந்தையில் உணவு தானிய விற்பனை நன்றாக இருப்பதாலும் பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை நீடிக்க மத்திய அரசு பரிசீலிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். இதனால் பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் இம்மாத இறுதியோடு முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 80 கோடி பேர் பயனடைந்ததாக மத்திய அரசு தரப்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.