Skip to main content

'மோடி பிக்பாக்கெட் காரர்'- ராகுல் பேச்சால் மீண்டும் வந்த சிக்கல் 

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

Election Commission notice to rahulgandhi

 

ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸும், பா.ஜ.க.வும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.

 

ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தனர். அதற்கு பா.ஜ.க கண்டனங்களை தெரிவித்து வந்தது. தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மீதும், ராகுல் காந்தி மீதும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பா.ஜ.க பிரதிநிதிகள் குழு தேர்தல் ஆணையத்தில் புகாரளித்திருந்தனர்.

 

அவர்கள் அளித்த அந்த புகார் மனுவில், ‘ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடியை ‘பனாட்டி’ (அபசகுனம்) என்ற அவதூறு வார்த்தையால் குறிப்பிட்டார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி தோற்றதற்கு பிரதமர் மோடிதான் காரணம் என்ற பொருளில் அவர் பேசினார். மேலும், மோடியை பிக்பாக்கெட்டுக்காரர் என்றும் பேசியுள்ளார்’ என அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில், இந்த விவகாரத்தில் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மோடியை பிக்பாக்கெட்டுக்காரருடன் ஒப்பிட்ட தனது பேச்சுக்கு நவம்பர் 25ஆம் தேதிக்குள் ராகுல் காந்தி விளக்கம் தர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ராகுல் காந்தி மோடி சமூகம் குறித்து பேசியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்