அயோத்தியில் புதிதாக கட்டப்படும் மசூதியின் மாதிரி படம் வெளியிடப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தி மாவட்டத்தில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாகக் கட்டப்படவுள்ள புதிய மசூதியின் மாதிரி படத்தை இந்திய- இஸ்லாமிய கலாச்சார அமைப்பு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் புதிதாக கட்டப்படும் மசூதியின் பின் பகுதியில் மருத்துவமனையும் இடம் பெறுகிறது. மேலும், ஓர் அருங்காட்சியகமும் கட்டப்படுகிறது.
அயோத்தி நில வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு பின்னர் மத்திய சன்னி வக்ஃபு வாரியத்தால் இந்திய- இஸ்லாமிய கலாச்சார அமைப்பு உருவாக்கப்பட்டது. ஏற்கனவே, அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு கோயில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில், புதிய மசூதியின் மாதிரி படம் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மசூதியின் மாதிரி படத்தைத் தொடர்ந்து, கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.